For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ #DDTamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் ட்வீட்!

07:57 PM Oct 18, 2024 IST | Web Editor
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை   “  ddtamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை”   ஆளுநர் ஆர் என் ரவியின் ஆலோசகர் ட்வீட்
Advertisement

டிடி தமிழ் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியில் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும், என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியில் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை, தூர்தர்ஷன் ஏற்பாடு செய்திருந்த, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற, இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னை பொன்விழா நினைவேந்தல் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

https://twitter.com/Sambandam/status/1847261943821652105

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் குழுவினர், “திராவிடம்” என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியை கவனக்குறைவாகத் தவறவிட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அதிகாரிகள் ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை. ஆளுநர் தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவற்றைத் தொடர்ந்து உயர் மட்டத்தில் வைத்திருப்பார்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement