ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!
உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் துணை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பாதி வழியில் வந்து பின் முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 34 துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள முன்னணி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை.