“மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” - அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
மழையால் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
சென்னையில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதிலிருந்து பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளை களத்திலேயே பார்க்க முடியவில்லை. அதேபோல சித்தா துறையும் செயல்படாமல் உள்ளது. உடனடியாக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் சுகாதார துறையின் பணியாளர்களை களத்தில் இறக்கி தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும், தண்ணீரில் இறந்து கிடக்கும் எலி உள்ளிட்ட உயிரினங்களால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விசயத்தில் அரசு மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் காய்ச்சிய தண்ணீரையே பருக வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் தங்களை தானே தற்காத்துக் கொள்ள வேண்டும்.சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் குறிப்பிட்ட சதவீத முடிவடைந்தது என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ஒரு கருத்து கூறுகிறார். மேயர் ஒரு கருத்து கூறுகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
எவ்வளவு சதவீதம் வேலை முடிந்துள்ளது? நிதி எவ்வளவு செலவு செய்துள்ளது? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்தால் அதற்குரிய பதிலை நாங்கள் அளிப்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.