For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கூரன் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்" - #ManekaGandhi கோரிக்கை!

01:56 PM Dec 19, 2024 IST | Web Editor
 கூரன் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்     manekagandhi கோரிக்கை
Advertisement

'கூரன்' திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

தெரு நாய்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இதில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது, "இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன்.

திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகம், மகிழ்ச்சி, பயம் என அனைத்தையும் உணர்கிறது. மேலும், அவை அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறது. இந்தப் படம் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களிலிருந்து தொடங்குவோம்.

நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன்.நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை அனைத்தும் மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை.

நான் உங்களுக்குச் சில சம்பவங்களைக் கூற விரும்புகிறேன். மசூரியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு தொடக்க விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நான் ஒரு நபரும் அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, விலங்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அவரது வீட்டிற்கு செல்லும் சாலையில் நுழைந்தோம். அது ஒரு பெரிய சாலை. அது அவரது வீட்டிற்கு சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும்.

அவரது நாய் அங்கே நின்று கொண்டிருந்தது. இதற்கு முன் நான் அவற்றைச் சந்தித்ததே இல்லை. அப்போது நான் அவரிடம், "உங்கள் நாய் காலையில் தனது பாதத்தை காயப்படுத்தியதாகக் கூறுகிறது. அதற்கு மிகவும் வலிக்கிறது,யாரையும் அதைத் தொட அனுமதிக்கவில்லை" என்று கூறினேன். அதற்கு அவர், "இதனை நான் நம்பவில்லை" என்றார். நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றோம். அங்க அவர் தனது மனைவியிடம் பேசினார். அவரது மனைவி, "உங்களுக்குத் தெரியுமா, உங்கள் நாய் காலையில் இருந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. காலில் காயம்பட்டு இருந்தது கட்டுப் போடக் கூட விடவில்லை" என்றார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான அனுபவங்கள் எனக்கு உண்டு.

விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது, அதனை நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. எஸ். ஏ . சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்கு நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும்.

உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி"

இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

Advertisement