“அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” - தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.
2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்"
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.