"எதையும் சமாளிக்க அரசு தயார்" - முதலமைச்சர் #MKStalin பேட்டி
கனமழை பெய்துவரும் நிலையில் மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘ஃபெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் கனமழையால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அநேக இடங்களில் நேற்று முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தென் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"கனமழை குறித்து 2 நாட்களாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எது வந்தாலும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எங்களால் முடிந்தவரை ஒன்று கடுமையாக எதிர்ப்போம்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.