“நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது” - ராகுல் காந்தி
‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பீகாரில் விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.
மணிப்பூரை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமுக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அசாமில் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதையடுத்து, அசாம் பயணத்தை முடித்துக் கொண்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில், தற்போது பீகாரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பீகாரில் இரண்டாவது நாளாக நடைபயணத்தை தொடர்வதற்கு முன் காந்தியின் நினைவு நாளையொட்டி, காந்தியின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, பூர்ணிமா மாவட்டத்தில் கூடியிருந்த விவசாயிகளுடன் அமர்ந்து கலந்துரையாடினார். அப்போது, அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர்,
இங்கு இந்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுகிறது. "இந்தப் பிரச்சினையை உங்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். என் குரலுக்கு மோடி உத்தரவாதம் அளிப்பார் என என்னால் சொல்ல முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகளை தீர்ப்போம் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்களின் நிலம் பறிக்கப்படுகிறது. உங்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று நான் நினைக்கிறேன்.
நாட்டில் ரூ.14 லட்சம் கோடி, கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. நான் இங்கு வெற்றுப் பேச்சு பேசவில்லை. விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடனை தள்ளுபடி செய்தோம். சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு உரிய விலையை வழங்கினோம் எனக் கூறினார்.