“கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு அரசியல் வட்டாரத்தில் கச்சத்தீவு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியது.
பிரதமர் மோடியின் பதிவில் “ கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் இந்த விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு கடல் எல்லை வரையறை தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், அப்போது, வரையறுக்கப்பட்ட எல்லையின் படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக கூறினார்.
கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்ததாக கூறிய ஜெய்சங்கர், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறு கச்சத்தீவு விவகாரம் இந்திய அரசியலில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
இந்நிலையில், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டியளித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியா -இலங்கை இடையிலான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தார். கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “ஜெயலலிதாவின் இடத்தில் இன்று பிரதமர் மோடி இருக்கிறார்...” - டிடிவி தினகரன் பேச்சு
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.