தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதி செய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதி செய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.