“தமிழ்நாட்டில் சட்டத்தின் வழியில் ஆட்சி நடைபெறுகிறது” - சபாநாயகர் அப்பாவு பேட்டி!
தமிழ்நாட்டில் சட்டத்தின் வழியில் ஆட்சி நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் (சபாநாயகர்) அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“‘வேர்களை தேடி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வெளிநாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் இன்று திருநெல்வேலியை பார்வையிட வந்துள்ளனர். 38 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர். சட்டத்தின் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு சட்டத்தின் வழியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நான்கு ஆண்டு ஆட்சியில் எந்த குற்றமும் நடைபெறவில்லை. தற்போது ஏதாவது குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தியின் பேச்சை சர்ச்சையாக்கி வருகின்றனர்.
எந்த சூழலில் அமைச்சர் பேசினார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள் சமூகம் தான் நாட்டை ஆண்டது என கூறுவார்கள். அதை சொல்லக்கூடாது என கூற இயலாது. அதை ஒரு குற்றமாக கருதக்கூடாது. இந்த அரசின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் எந்த குற்றங்களும் நடைபெறவில்லை. இதை ஒரு குற்றமாக பெரிதாக்குகிறார்கள்.
எந்த சூழலில் யாரிடம் கூறினார் என்ற விவரம் தெரியவில்லை. பொது மேடையில் பேசியதை வெட்டி திருத்தி பேசியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை பற்றி அமித்ஷா பேசினார்.
அதையே தொழில்நுட்பத்துடன் மாற்றம் செய்துள்ளார்கள் என பாஜக விளக்கம் அளித்தார்கள். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பேசியதே திருத்தி விட்டார்கள் என்றால், மூர்த்தி பேசியதில் என்ன குறையை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை ஒரு போதும் தனியார்மயமாக்காது. 500 பள்ளிகளை தத்து கொடுப்பது தனியார்மயமாகாது. பள்ளிக்கல்வி துறைக்கும், உயர்கல்வி துறைக்கும் தரக்கூடிய நிதியை மத்திய அரசு தற்போதுவரை தரவில்லை. துணைவேந்தர் நியமனத்திற்கு பரிந்துரை செய்யவும், பல்கலைக்கழக மாநில மானியகுழு நிதியை கொடுக்கவும் ஏன் யுஜிசி பரிந்துரை செய்ய மறுக்கிறார்கள்.
பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு செலவு செய்தது என்ன என்பதை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைனிலும் அனைத்து விதமான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்தினால், காவல்துறை எந்த தடையும் விதிக்காது.
காலையில் போராட்டம் என அறிவித்து உடனடியாக போராட்டம் நடத்த சென்றால் மட்டுமே காவல்துறை தடை விதிக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுத்ததே கிடையாது” என தெரிவித்தார்.