“வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தியதாலேயே பாதிப்பு ஏற்பட்டது!” - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே கடும் மழை பற்றி சொல்லியும் அரசு அதில் அலட்சியம் காட்டியதாலயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.ஏற்கனவே மூன்று தினங்களுக்கு முன்பு வேளச்சேரி விருகம்பாக்கம் மேற்கு மாம்பலம் தி. நகர் ஆகிய பகுதிகளில், வெள்ள பாதிப்பை எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.அதேபோல மீண்டும் நாளை சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு அவர் நாளை செல்ல திட்டமிட்டுள்ளார், அதற்கு முன் இன்று ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
மழை வெள்ள பாதிப்பு வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதாலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார், மேலும் பல இடங்களில் பால் உணவு போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் மழை ஓய்ந்து ஐந்து நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளில் நியமிக்கப்பட்ட பணிகள் முடிக்கி விட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் மழை பெய்த பின்னர் என்எல்சியிலிருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டுள்ளதாக சொல்கிறார் இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் செயல்பாடு என்ன என்று.
மழை வெள்ள பாதிப்புகளுக்கு வடிகால் பணிகளை அதிமுக ஆட்சி காலத்திலேயே தொடங்கி விட்டதாகவும் அதன் பின்னர் இவர்கள் வந்து அதை தொடர்ந்ததாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது மழை நீர் பணிகள் சென்னையில் முடிந்ததாக சொல்லிவிட்டு தற்போது 51% மட்டுமே பணிகள் முடிந்திருப்பதாக சொல்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள் உண்மை தான் ஆனால் குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல என்று கமலஹாசன் சொல்லி உள்ளரே!? கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை என்று விமர்சனம் செய்தார்.