புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் (PRTC) சார்பில் நூற்றுக்கும்
மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு
வருகின்றன. இங்கு மொத்தமாக 617 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், 263 பேர் ஒப்பந்த அடிப்படையிலும்
பணிபுரிகின்றனர்.
இதனிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய
வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு சம்பளத்தை வழங்க கோரியும் சாலைப் போக்குவரத்து கழக ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 28-ம் தேதி முதல் 600 க்கும்
மேற்பட்ட PRTC ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் பணிமனை வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் போராட்டம் காரணமாக 5-வது நாளாக இன்றும் அரசு பேருந்துகளை இயங்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.