நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி - 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் பேருந்து நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த போது நெல்லை டவுணில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விபத்தில் சிக்கிய மூவரையும் பரிசோதித்த போது மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தன. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மூன்று பேர் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தது நெல்லை டவுண் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(23), டவுண் முகமது அலி தெருவை சேர்நத சந்தோஷ்(22) மற்றும் சாதிக் (22) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் நண்பர்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் நெல்லை சந்திப்பு நோக்கி வந்த போது விபத்து நடந்தது தெரியவந்தந்து. நெல்லை சந்திப்பு பாலத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தகவல் அறிந்து இளைஞர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.