கூகுள் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்?
ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தோல்வி எதிரொலியாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. தொழில்நுட்ப படிப்பில் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவரின் தனித்துவமான திறமையையும், மாறுபட்ட வித்யாசமான சிந்தனையையும் கண்ட கூகிள் நிறுவனம், அதனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் அமர்த்தியது.
அண்மை காலத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மீதான தாக்கம் அதிகரித்து வருவதால், கூகுள் தனது நிறுவனம் சார்பில் பல AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது.
அதாவது, ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பூதகரமாக மாறியது. இதன் மூலம் இந்த தொழில்நுட்பம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறதா? என்ற சர்ச்சையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. அப்போது கூகுள் நிறுவனம் சார்பில், “ஜெமினி சாட்பாட், வரலாற்று துருப்புகளை தவறாக சித்தரித்ததை நாங்கள் அறிவோம். அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம். இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றுள்ளது” என கூறப்பட்டது.
ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதனை சரிசெய்யும் வரை மக்களின் படத்தை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை நிறுத்தப் போகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சர்ச்சைக்கு சுந்தர் பிச்சை, பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் செய்வதாக அறிவித்தார்.
இந்த AI தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்பதால், இதன் தாக்கத்தை சுந்தர் பிச்சை எதிர்கொள்ளக்கூடும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து அவரை மாற்றுவதற்கான குரல்கள் வளர்ந்துவருகின்றன. இந்த ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்த போதிலும், கூகுள் சமீபத்தில் இந்த செயலியை இடைநிறுத்தியது.
மேலும், சேவை நிறுத்தப்பட்ட பிறகு, பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. ஜெமினி தொழில்நுட்ப சறுக்கல் மற்றும் பங்கு மதிப்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, சுந்தர் பிச்சையை உயர் பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னாள் OpenAI ஆராய்ச்சியாளரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுளை தற்போதைய நிலையில் வைத்திருக்க தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.