”போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது”- ரஷ்ய அதிபர் புதின்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர் களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ”எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.