காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் - இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!
கடந்த 2023 முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை காசாவைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போர் நிறுத்தத்திற்கான தனது 20 அம்ச திட்டத்தை அறிமுகத்தினார் டிரம்ப். இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்தனர். ஆனால் ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனால் டிரம்ப், ஹமாஸ் அமைப்பினா் 20 அம்ச திட்டத்தை ஏற்காவிட்டால், மிக மோசமான பேரழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். இதனையடுத்து ஹாமாஸ் குழுவினர் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கவும், டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். இஸ்ரேல் உடனடியாக காசா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.