திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(நவ. 12) நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 995.500 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.60,42,685 ஆகும்.
அதேபோல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவர், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த 700 கிராம் எடையுள்ள 7 தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் எடையுள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ.47,75,400 ஆகும்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,08,18,085 மதிப்புள்ள 1 கிலோ 789.500 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.