"கடவுள் என்னுடன் இருக்கிறார்" - கொலை முயற்சியில் தப்பிய பின் முதன்முறையாக பேசிய டிரம்ப்!
கடவுள் என்னுடன் இருக்கிறார் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீதான கொடூர தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பொது கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "'கொலை முயற்சி நடந்த அன்று என்ன நடந்தது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அதைச் சொல்வது மிகவும் வேதனையானது. நான் பட்லர் டவுன்ஷிப்பில் பேச்சி கொண்டிருந்தேன். நான் தெற்கு எல்லை ஊடுருவல் பற்றி மக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
எனது ஒரு பக்கத்தில் ஒரு பெரிய திரை இருந்தது, அதில் எனது பதவிக்காலம் குறித்து நான் காட்டினேன். இந்த நேரத்தில் நான் என் வலது பக்கம் திரும்பியவுடன், பெரிய சத்தம் கேட்டு வலது காதில் ஏதோ அடித்தது. நான் என் வலது கையால் என் காதைப் பிடித்தேன், என் கை இரத்தத்தால் கறைபட்டது. நாங்கள் தாக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொண்டேன். மிகவும் துணிச்சலான பாதுகாவலர்கள் மேடைக்கு ஓடி வந்து என்னை பாதுகாத்தனர். கடவுள் என்னுடன் இருந்ததால் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்.
நான் திரும்பாமல் இருந்திருந்தால், கொலையாளி தனது இலக்கை தவறவிட்டிருக்க மாட்டார். அப்போது நான் இன்றிரவு உங்களுடன் இருந்திருக்க மாட்டேன். என்னுடன் ஆயிரக்கணக்கான மக்கள் நின்றனர். இரகசிய சேவை துப்பாக்கி சுடும் வீரர் மிகவும் தைரியமாக தாக்குதல் நடத்தியவரை ஒரே தோட்டா மூலம் கொன்றார்.
நான் இறந்துவிட்டதாக மக்கள் நினைத்தார்கள். அதனால்தான் நான் எழுந்ததும், அவர்களை ஊக்குவிக்க, என் இரத்தம் தோய்ந்த கைகளால் உயர்த்தினேன். மக்கள் சண்டை-போராட்டம் என முழக்கங்களை எழுப்பினர்” என்று கூறினார்.