“கடவுள் என் பக்கம் நிற்கிறார்” - டெல்லி முதலமைச்சர் #ArvindKejriwal!
தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று(செப்.13) வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது;
நான் வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்ததற்கும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் என்னை வரவேற்க வந்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும், நமது நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நான் எனது வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கடவுள் என் பக்கம் இருக்கிறார். என்னைச் சிறையில் அடைத்து அடக்க நினைத்தனர்.
ஆனால், சிறையில் அடைத்தாலும் நான் மேலும் வலிமை பெறுவேன். நான் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்சிங் மான், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறைக்கு வெளியே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.