ஞானவாபி மசூதி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனு தள்ளுபடி
ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தொடரபட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்ததாக கோரிய வழக்கின் விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தனி நீதிபதி அமர்வு விசாரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட அமர்வு, மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது. உயர்நீதிமன்றங்கள், ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு தங்களது உத்தரவில் குறிப்பிட்டது.
ஞானவாபி மசூதி வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், தனி நீதிபதி அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் நவம்பர் 6-ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஏஎஸ்ஐ தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 17 வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டதன் பேரில் வாரணாசி மாவட்ட
நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவைப் பிறப்பித்தார்.
மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிர்வாகக் குழு நவம்பர் 6-க்குள் பதிலளிக்க வேண்டும். என உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.