கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் – சரண்யா தம்பதி. இவர்களது மகள் சோபியா (8) அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார். அதேபோல், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் – வேணி தம்பதியரின் மகள் கிஸ்மிதா (4) அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். இந்த நிலையில் இரு சிறுமிகளும் இன்று காலை வழக்கம்போல் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றனர்.
இதனையடுத்து, இவர்களது பெற்றோர் மதிய உணவு இடைவேளைக்காக சிறுமிகளையும் அழைத்துச் செல்ல வந்தனர். அப்போது, இரு சிறுமிகளும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளையும் தேடியபோது பள்ளியின் எதிரே இருந்த கன்மாயில் இரு சிறுமிகளின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமிகளின் உடல்களை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியதுடன்
உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க
கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் தாய்மேரி மற்றும் அங்கன்வாடி பணியாளர் தினேஷ் அம்மாள் ஆகியோரை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.