அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்... வெளியுறவுத்துறை கண்டனம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
“இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் போலவே, கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உரிமை உண்டு. இதில் அவர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும். குற்றமற்றவர் என்ற அனுமானம் சட்டத்தின் ஆட்சியின் மையக் கூறாகும். அது அவருக்கும் பொருந்த வேண்டும்.” என்றார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெர்மனியின் இத்தகைய கருத்துகள் நமது நீதித்துறை செயல்முறையில் தலையிடுவதாகவும், நமது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாங்கள் பார்க்கிறோம்.
இந்தியா சட்டத்தின் ஆட்சியுடன் துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயக நாடாக உள்ளது. நாட்டிலும், ஜனநாயக உலகில் உள்ள பிற இடங்களிலும் உள்ள அனைத்து சட்ட வழக்குகளையும் போலவே, சட்டம் உடனடியாக அதன் சொந்த போக்கில் அணுகும். இந்த விஷயத்தில் வெளியிடப்பட்ட பக்கச்சார்பான அனுமானங்கள் தேவையற்றவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.