For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொறியியல் படிப்புகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்!

06:49 AM Jul 29, 2024 IST | Web Editor
பொறியியல் படிப்புகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
Advertisement

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அதில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியானது. இதைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், அதில் 836 இடங்களில் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: முதல் சுற்றில் 11,595 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு - News7 Tamil

இந்நிலையில்,  பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை - 29) முதல் தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 26,654 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 31-க்குள் தேர்வு செய்ய வேண்டும்.

இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து, ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும், இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement