“வாய்மையே வெல்லும்” - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியது. இந்த ஆய்வறிக்கை வெளியானதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதனையடுத்து ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல்.சர்மா, காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோர் தனித்தனியே 4 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செபி அமைப்பின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இதையும் படியுங்கள் : அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்த குழு தனது ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தொழிலதிபர் கவுதம் அதானி தனது X தள பக்கத்தில், “உண்மை வென்றுவிட்டதை உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வெளிக்காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. நாட்டின் வளர்ச்சிக்கான எங்களது பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.