மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. - மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!
மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக கௌரவ் கோகோய் கட்சியின் கொறடாக்களில் ஒருவராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
இதனையடுத்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமைக் கொறடா மற்றும் 2 கொறடாக்கள் நியமனங்கள் தொடர்பான கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, "கௌரவ் கோகோய் மக்களவையில் கட்சியின் துணைத் தலைவராக இருப்பார். 8 முறை எம்.பி.யாக இருந்த கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமைக் கொறடாவாக இருப்பார். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும், கிஷன்கஞ்ச் எம்.பி. முகமது ஜாவேத் மக்களவையில் கட்சியின் கொறடாக்களாக இருப்பார்கள். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் மக்களவையில் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.