விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசிக ஆர்ப்பாட்டத்தில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
பயின்று வரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவன் மாற்று சமூகத்தினரால்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மழையூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (பிப் - 14 ) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!
இதையடுத்து, மழை அரசு மருத்துவமனையில் சாலை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் எக்ஸ்ரே வசதி செய்து தரக்கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர்கள் ஒலிபெருக்கியின் ஒயர்களை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு
வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு ஆனது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
விசிக மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் மீது விழுந்தது.
இதில் மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் அணிந்திருந்த உடையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிந்தது. இதைக் கண்ட விசிக வினர் தீயினை அனைத்தனர். பெட்ரோல் குண்டு வீசிய அடையாளம் தெரியாத நபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மழையூர் பேருந்து நிறுத்தம் முன்பு புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக
கந்தர்வகோட்டை பகுதியில் புதுக்கோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்
விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களுக்கு துணை போவதாகவும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்றதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம், எனவே நேற்று காவல் பணியில் ஈடுபட்ட
அனைத்து காவலர்களையும் எந்தவித நிபந்தனை அடிப்படையின்றி உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர்.