பூண்டு வரத்து அதிகரிப்பு - சென்னையில் ஒரு கிலோ பூண்டு ரூ.160 க்கு விற்பனை!
வரத்து அதிகரித்ததால் சென்னையில் பூண்டின் விலை ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பெங்களூரு குண்டுவெடிப்பு | போலீஸ் விசாரணை எந்தளவுக்கு எட்டியுள்ளது?... மற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு உள்ளதா?
தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தும் பூண்டு, பெரும்பாலும் மத்தியப் பிரதேசம், குஜராத்,
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும்
ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை
செய்யப்படும். பொங்கலுக்குப் பின்னர் வடமாநிலங்களில் இருந்து பூண்டு
மூட்டைகள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பூண்டு வரத்து குறைவாக இருந்த காரணத்தால், கடந்த ஆண்டு இறுதியில் பூண்டின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து,பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு கிலோ பூண்டு ரூ. 300 வரை விற்பனையானது.
புதிய பூண்டு அறுவடை தொடங்கினால் விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படி, தற்போது, புதிய பூண்டு மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், பூண்டு விலையும் குறைந்து வருகிறது.கோயம்பேடு சந்தையில், ஒரு கிலோ பூண்டு 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.