For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!

04:08 PM Mar 13, 2024 IST | Web Editor
சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை   அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது  ஒருவருக்கு வலைவீச்சு
Advertisement

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அதிமுக நிர்வாகி உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்,  ஒருவரைத் தேடி வருகின்றனர். 

Advertisement

திருப்பூர் மாவட்டம்,  வெள்ளக்கோவிலில்  கடந்த 9ம் தேதி இரவு வீரக்குமார சாமி கோயில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்திய  கும்பல் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிகாலை வரை கூட்டு பலாத்காரம் செய்து மீண்டும் அதிகாலை கோயில் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளக்கோவில், காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32),  செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மூலனூர்,  தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (27),  வெள்ளக்கோவில், பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28),  வெள்ளக்கோவில்,  ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளக்கோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம் பாளையத்தைச் சேர்ந்த பலசுப்பிரமணி (30) என 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தினேஷ் என்பவர் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியாக இருப்பதும்,  அவரது தந்தையும் அதிமுக நிர்வாகியாக பொறுப்பு வகிப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து சிக்கிய 7 பேரையும் போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement