“விநாயகர் சதுர்த்தி - பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது!” - #MadrasHighCourt உத்தரவு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை கிராமத்தில்
விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்த போது, அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் யு.உதயகுமார் ஆஜராகி, 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளையில் பிளஸ்ட்ர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளுக்கு அனுமதி கேட்க முடியாது என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான சிலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலான சிலைகள் மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழாவில் பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன விநாயகர் சிலைகளை
வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.