பிரான்ஸ் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு!
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான், 2-வது முறையாக பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு அரசுஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவு, புதிய குடியேற்ற மசோதா ஆகியவற்றுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மக்களின் அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக அமைச்சரவையை மாற்றி அமைக்க அதிபர் மேக்ரான் முடிவு செய்தார். இந்த நிலையில்தான், பிரதமர் எலிசபெத் போர்ன் தனது ராஜிநாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
பிரான்ஸின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். அதிபர் இமானுவேல் மேக்ரான் அடுத்த பிரதமராக யாரைத் தேர்வு செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அதிபர் இமானுவேல் மேக்ரான் 34 வயதேயான கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தார். பிரான்ஸ் வரலாற்றில் 34 வயது இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றிருக்கிறார்.
பிரான்ஸின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேப்ரியல் அட்டல், தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.