ஒரே காரில் நீதிமன்றம் வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே, 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணையதளம் வாயிலாக அறிவித்தனர். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு இன்று (மார்ச் 24) ஒரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.