ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.மூப்பனார் இருந்தபோது அகில இந்திய அளவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஜி.கே.மூப்பனார் என புகழாரம் சூட்டினார்.
கட்சி பேதம் பார்க்காமல் அனைவரிடத்திலும் மிகவும் எளிமையாக, தேசிய தலைவராகவும் விளங்கியவர். ஜி.கே மூப்பனார் மறைந்த போது உடல் அடக்கம் செய்யும் வரையில் உடனிருந்து அஞ்சலி செலுத்தியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயலாற்றியவர் என்று தெரிவித்துள்ளார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.