நிதி ஒதுக்கீடு கோரிக்கை - இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் #MKStalin
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க கோரிக்கை வைக்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து வரவேற்றனர். நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது வழக்கை நடத்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்திற்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் முதலமைச்சர் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.