விவசாய இடுபொருள்களில் ரசாயனத்தைக் குறைக்க #FSSAI வலியுறுத்தல்!
உணவுத் தொழிலை முன்னேற்றுவதற்கு விவசாய இடுபொருள்களில் ரசாயன பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் நேற்று (செப். 7) பாரத் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் எஃப்எஸ்எஸ்ஏஐ நிர்வாக இயக்குநர் இனோஷி சர்மா பங்கேற்றுப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில்,
“உணவுப் பயிர்கள், பழங்களில் ‘பூச்சிக்கொல்லி அளவு’ கட்டுப்பாட்டை அமல்படுத்துவது சவாலாக உள்ளது. இவை பயிரிடப்படும் தோட்டம் மற்றும் பண்ணைகளிலேயே வழக்கமான தணிக்கை அவசியமாகும். அங்கேயே முறையற்ற இடுபொருள்களை நிராகரிக்க வேண்டும். மாசுபாட்டுக்கு வழிவகுக்கும் அதிகபடியான பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
உணவு வணிக நிறுவனங்கள் மத்தியில் சுய கட்டுப்பாடு கலாசாரம் மேலோங்க வேண்டும். அவர்களின் பொருள்களில் தரநிலைகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய சான்றளிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரை பணியமர்த்த வேண்டும். விற்பனை பொருள்களின் லேபிளில் துல்லியமான தகவல்களைத் தெரிவித்து, மக்களை தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, பாரத் வர்த்தக கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் நரேஷ் பச்சிஷியா பேசுகையில், “பயிர் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தின் கூறுகள் உணவுப் பொருள்களில் கண்டறியப்பட்டால் உணவு பதப்படுத்தி, விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல சூழல்களில், அத்தகைய பொருள்களின் ஏற்றுமதிகூட ரத்து செய்யப்படுகின்றன. வேளாண் தோட்டக்கலை சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.