சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இலவச STEM வகுப்புகள் - பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு!
சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள தி அமெரிக்கன் சென்டர், கோடை விடுமுறைகளில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) உள்ளிட்ட பாடங்களில் கவனம் செலுத்தற்கான வகுப்புகளை தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வகுப்புகள் வருகிற மே 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இலவசமாக நடத்தப்படும் இந்த வகுப்புகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் நுட்பமான செயல்முறைகளை கொண்டு பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த வகுப்புகள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெள்ளிக் கிழமையன்று காலை 10 மணிக்கு திரைப்படத் திரையிடல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு STEM பாடங்களை கற்றுகொள்ள மைக்ரோபிட்ஸ், ஸ்னாப் சர்க்யூட்ஸ், மெர்ஜ் கியூப் , மெய்நிகர் ரியாலிட்டி கண் கண்ணாடி, 3D பிரிண்டர் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் கல்வி தொடர்பான கலகலப்பான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள மாணவர்கள் ChennaiAMCenter@State.Gov அல்லது WhatsApp 73056-76662 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
தி அமெரிக்கன் சென்டர், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் கற்றல், உரையாடல் மற்றும் உத்வேகத்திற்கான மூலக்கல்லாக செயல்பட்டு வருகிறது.15,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் மற்றும் ஏராளமான மல்டிமீடியா மற்றும் டிஜிட்டல் வளங்களைக் கொண்ட இந்த சென்டரில், தினசரி காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.