திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து டிச.23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பக்தர்கள் இன்று (ஜன.1) இரவு வரை சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த டிச.23-ம் தேதி முதல் இன்று (ஜன.1) வரையிலான டோக்கன்கள் மொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: குழந்தையுடன் புத்தாண்டு கொண்டாடிய கிளென் மேக்ஸ்வெல் – வீடியோ வைரல்!
இந்த டோக்கன்கள் பெற்றவர்களும், ஆன்லைனில் ரூ.300 சிறப்பு டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே சொர்க்க வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவுடன் சொர்க்க வாசல் தரிசனம் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து, திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசன், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி ஆகிய 3 இடங்களில் உள்ள கவுன்டர்கள் மீண்டும் நாளை (ஜன.2) திறக்கப்பட உள்ளது.
இந்த கவுன்டர்கள் மூலம் நாளை (ஜன.2) அதிகாலை 4 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அதே நாளில் மதியம் 12 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.