அதிக லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.2.56 கோடி மோசடி - வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைது!
மூதாட்டியிடம் ரூ.2.65 கோடி பெற்று மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் பெண் ஊழியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கொரட்டுரைச் சேர்ந்த பூர்ணிமா நீத்து என்பவரின் தாயார் சாந்தகுமாரி (வயது 66). இவருக்கு வங்கி மூலம் ஜெயஸ்ரீ என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து, சென்னை சூளைமேடு பகுதியில் V.J. Agency என்ற பெயரில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்குரிய லைசென்ஸ் வைத்துள்ளதாகவும், அந்த தொழிலில் பணம் முதலீடு செய்தால் மாதா மாதம் அதிகமான லாபத்தொகை தருவதாகவும் சாந்தகுமாரியை ஜெயஸ்ரீ நம்ப வைத்துள்ளார்.
இதன் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வெவ்வேறு தேதிகளில் பல தவணைகளாக ரூ.2.65 கோடியை பெற்றுக் கொண்டு அந்த பணத்தில் லாபத் தொகை என்று கூறி ரூ.64 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக ஜெயஸ்ரீ மீது சாந்தகுமாரி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான அண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியின் முன்னாள் பெண் ஊழியர் ஜெயஸ்ரீயை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.