#Formula4 கார் பந்தயம் | "விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
பல விமர்சனங்களை மீறி எவ்வித பிரச்னையும் இல்லாமல் பார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்ததுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற இரவு
நேர பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு
அரசுத்துறை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை,
சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன்,
டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர மேயர் பிரியா, எம்.பி. தயாநிதி மாறன்,
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்,
விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி உள்ளிட்டோர் உடன் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சென்னை மாநகராட்சி, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததற்கான பாராட்டுச் சான்றிதழையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பார்முலா 4 கார்பந்தயம் தொடங்கும் போது இந்த கார் பந்தயம் நடக்குமா நடக்காதா என்கிற
சந்தேகம் இருந்தது. தற்போது கார் பந்தயம் நடந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி
நடப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெற்ற இரவுநேர பார்முலா 4 கார்பந்தயத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகளில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.
சென்னையில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.
அனைவரும் பாராட்டுகின்றனர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கும்
முன்பே ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே கார்பந்தயத்தை நடத்த வேண்டும் என
முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். பாதுகாப்பாக சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் நடத்துவதுதான் கார் பந்தயத்தின் உண்மை வெற்றி என முதலமைச்சர் கூறினார். சிறுவிபத்து கூட இருக்காது என முதலமைச்சருக்கு வாக்குறுதி அளித்துவிட்டுதான் போட்டியை நடத்தினோம்.
முதலமைச்சருக்கு அளித்த வாக்குறுதியை 100% காப்பாற்றி உள்ளோம்.
குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அதிகாலை, வெயில் என 2
நாட்கள் பந்தய தடத்தை தூய்மையாக வைத்திருந்தனர். போக்குவரத்து காவல்துறையின்
பங்கும் முக்கியமானது. நகரின் மையப்பகுதியில் நடத்துவதால் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும் சூழல் இருந்தது. போக்குவரத்து நெரிசலை பெரிய
செய்தியாக்க வேண்டும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் போட்டியை நிறுத்தக் கூட
சில முயற்சி செய்தனர்.
இதையும் படியுங்கள் : தனிப்பட்ட முறையில் #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
ஒரு புறம் இயல்பான போக்குவரத்தும், மறுபுறம் கார் ரேஸ் நடந்துக் கொண்டிருந்தது
போன்ற வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல்
இல்லாமல் போக்குவரத்து போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின்னர்
விமர்சித்தவர்கள் கூட பாராட்டினார்கள். சின்ன விபத்தைக் கூட ஊதிப்பெருசாக்க சிலர் காத்திருந்தனர். கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்த போது நாய் ரேஸா கார் ரேஸா என சிலர் விமர்சித்தனர்.
கார் பந்தயத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கார் ரேஸ் நடத்தவில்லையென்றாலும் இன்னும் நடத்தவில்லையா என விமர்சனம் செய்திருப்பார்கள். கார் பந்தயத்திற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையையும், போட்டி நடந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். நினைத்ததை விட அதிகளவிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. கார் ரேஸ் நடத்தக்கூடாது என நினைத்தவர்கள் கூட 2வது நாளில் எங்களுக்கும் கார் ரேஸ் பார்க்க பாஸ் வேண்டும் எனக் கேட்டனர்.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது என 3 நாட்கள் நடத்த வேண்டிய
ரேஸை 2 நாட்களில் நடத்தி முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
"கார் பந்தயம் நடத்தி முடித்தது அனைவருக்கும் மகிழ்ச்சிதான். பல விமர்சனங்களை மீறி எவ்வித பிரச்னையும் இல்லாமல் கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.