முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மத்திய உள்துறை முன்னாள் அமைச்சரும், எனது அமைச்சரவை சகாவுமான சிவராஜ் பாட்டீல் அவர்கள் முதுமை காரணமாக அவரது சொந்த ஊரான லத்தூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கு துணை நின்றார். நாட்டில் எச்.ஐ.வி பரவலைத் தடுக்கும் நோக்குடன் ஓரினச் சேர்க்கையை குற்றமற்ற செயலாக மாற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எதிர்ப்பு எழுந்த போதிலும், தார்மீக அடிப்படையில் அவர் எனக்கு துணை நின்றார்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தேன். அதனடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மன்மோகன்சிங் அரசு ஒப்புக்கொண்டது. அதன் பின் சமூகநீதிக்கு எதிரான சிலரால் அந்த வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டது.
இப்படியாக சமூகநீதி, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் எனது முயற்சிகளுக்கு துணை நின்ற சிவராஜ் பாட்டீல் அவர்களின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.