புதுவை முன்னாள் பெண் அமைச்சர் விவகாரம் - புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக சபாநயகர் உறுதி!
புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சரும், நெருங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபிரியாங்கா தனக்கு இரண்டு அமைச்சர்கள் தொல்லை கொடுப்பதாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து தன்னிடம் கடிதம் கொடுத்தால் முதல்வரிடம் கலந்துபேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரியை பல்வேறு பொருட்களுக்கு உயர்த்தினாலும் கூட, அதையெல்லாம் தாண்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஜி.எஸ்.டி வரி விதிப்பை 5 மற்றும் 18 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு சார்பில்
நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முன்னாள் அமைச்சர் சந்திரபிரியாங்கா புகார் குறித்து என்னிடம் எந்தவித கடிதமும் வரவில்லை. மேலும் அவர் அமைச்சர்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. நானும் என்னுடைய அலுவலக தொலைபேசி எண்ணில் இருந்து 3 முறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. எனவே என்னிடம் கடிதம் கொடுத்தால் முதல்வரிடம் கலந்துபேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
”ரூ.669 கோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கட்டும் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. கடந்த 2-ம் தேதி தலைமை செயலரின் கையொப்பம் இடப்பட்டு மத்திய நிதியமைச்சகத்துக்கு கோப்பு சென்றுள்ளது. அரசு செயலர் முத்தம்மா இதற்கான பூர்வாங்க நடவடிக்கையை எடுத்து வருகின்றார். விரைவில் நிதி பெறப்பட்டு டெண்டர் விடப்படும். இந்த ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்படும். மாநில அந்தஸ்து தொடர்பாக அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்திப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவர் கட்சி ஆரம்பித்த முக்கிய நோக்கமே மாநில அந்தஸ்து தான்”
என்று தெரிவித்துள்ளார்.