முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!
03:38 PM Apr 09, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன்,  புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.  எம்.ஜி.ஆர். 1953-ம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பனை நியமித்திருந்தார்.  இதன் பின்னர் 1963-ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட  தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். இதைத் தொடர்ந்து திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன்,  எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தார்.  1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத போது,  ஆர்.எம்.வீரப்பன் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டு முறை சட்டப் பேரவைக்கும்,  மூன்று முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம்.வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,  உள்ளாட்சி துறை அமைச்சர்,  இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார். எம்ஜிஆரை வைத்து நிறைய படங்கள் தயாரித்த ஆர்.எம்.வீரப்பன்,  ரஜினிகாந்த்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான பாட்ஷாவையும் தயாரித்தார்.  பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.  அப்போது மேடையில் ஆர்.எம்.வீரப்பன் இருந்ததால்,  அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) காலமானார்.
                 Advertisement 
                
 
            
        அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்ட போது, 98 எம்.எல்.ஏக்.களின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைக்க ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஒன்றுபட்ட போது, ஆர்.எம்.வீரப்பன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 Next Article