பாஜக-வில் இணைகிறார் #Jharkhand முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது.
இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜக-வில் இணையப் போவதாக செய்தி வெளியாயின. கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலருடன் டெல்லி சென்றார். இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய் சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பாஜக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது பாஜக-வில் இணைவது ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) தனது ஆதரவாளர்களுடன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரான புகழ்பெற்ற பழங்குடியின தலைவர் சாம்பாய் சோரன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராஞ்சியில் பாஜக கட்சியில் இணைய இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். சாம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூலை 3-ந்தேதி தனது முதல்வர பதவியை ராஜினாமா செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.