#Jharkhand முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் மருத்துவமனையில் அனுமதி!
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், செரகில்லா பாஜக எம்எல்ஏவுமான சம்பாய் சோரனுக்கு இன்று தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல்நிலை முன்பை விட நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கப்படும் எனவும் அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சம்பாய் சோரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுன்ன பதிவில், “உடல்நிலை தொடர்பான பிரச்னைகள் காரணமாக நான் இன்று காலை மருத்துவமனையில் (ஜாம்ஷெட்பூர்) அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் கூற்றுப்படி, கவலைப்பட ஒன்றுமில்லை. இப்போது, நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். மிக விரைவில், முழு ஆரோக்கியமாக மாறிய பிறகு நான் உங்கள் அனைவருக்கும் மத்தியில் திரும்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.