#Delhi பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா காலமானார்!
மாவோயிஸ்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று உயிரிழந்தார்.
ஜிஎன் சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தின், ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டார். கைதைத் தொடர்ந்து கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நாகபுரி ஷெஷன்ஸ் நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தொடர்ந்து சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை எனக்கூறி, கடந்த மார்ச் மாதம் அவரை விடுவித்தது. கிட்டதட்ட 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் வெளியே வந்தார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 வாரங்களில் உயிரிழந்தார். பித்தப்பை நோய்த்தொற்று மற்றும் பிற பாதிப்புகள் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.