காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
கடந்த 1984ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது இரண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
சீக்கியர்கள் கலவரத்தின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கண்டோன்மென்ட் கலவர வழக்கில் தொடர்புடையதாக ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் குமாருக்கு இது இரண்டாவது ஆயுள் தண்டனையாகும்.
ஆயுள் தண்டனையைத் தவிர, கலவரத்தில் ஈடுபட்டதற்காக பிரிவு 147இன் கீழ் இரண்டு ஆண்டுகள், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காக பிரிவு 148 இன் கீழ் மூன்று ஆண்டுகள் மற்றும் அபராதம், மரணம் அல்லது கடுமையான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கொலைக்கு முயன்றதற்காக பிரிவு 308 இன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.