#Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!
ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டப்பட்டது.
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில் யானை ஒன்று நேற்று காலை 6 மணியளவில் முகாமிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் யானையை விரட்ட பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தத நிலையில், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை அடுத்து அதிகாரிகள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இருப்பினும் அதிகாரிகள் முகாமிட்டிருக்கும் பகுதிக்கு மிக அருகாமையில் வந்த யானை குளத்து நீரில் ஆனந்த குளியல் போட்டது. அந்த யானை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக ஆனந்த குளியல் போட்டு மீண்டும் குளத்தில் உள்ள புதருக்குள் சென்று பதுங்கி கொண்டது. தொடர்ந்து, சுமார் 15 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு யானையை வனத்துறையினர் கரிசல்குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது.