நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, வேகமாக வனப்பகுதியில் பரவி வருவதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம்
வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். குறிப்பாக டிசம்பர் மாதம் இறுதி முதல்
பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைப்பனி மற்றும் நீர்பனி தாக்கம் அதிகரித்து
காணப்படும். இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி மற்றும் உறை பனிப்பொழிவின் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு மரங்கள், செடி, கொடி, புற்கள் என அனைத்தும் காய்ந்து காட்சியளிக்கிறது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க
வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையோரங்களில் சுமார் 20 மீட்டர் தூரம் வரை தீ
தடுப்பு கோடு அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கூடலூர் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார்50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.