மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2 வது நாளாக பற்றி எறியும் காட்டு தீ!
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இந்த சூழலில் அப்பகுதியில் உள்ள மரங்கள், செடி கொடிகள் உள்ளிட்ட அரிய வகை மூலிகை செடிகள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இதனிடையே காய்ந்த நிலையில் காணப்பட்ட மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவ்வப்போது தீப்பற்றும் சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், நேற்று மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பிடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் காட்டு தீ பரவியுள்ளதால் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.