மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வன சரகத்திற்கு உட்பட்ட குரங்கணி செல்லும் சாலையில் உள்ள அடவு பாறை பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வனத்துறையின் தடையை மீறி விவசாயிகள் உடன் மலை மேல் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமானை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து வனத்துறையின் தடையை மீறி பேரிக்காடுகளை தூக்கி எறிந்து சீமான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் தடையை மீறி நாட்டு இன மாடுகளை மலை பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50 நபர்கள் குறித்து விசாரணை செய்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.
வனப்பகுதியில் அனுமதி இன்றி கால்நடைகளை அழைத்துச் சென்றது, வனவிலங்கு வாழ்விடத்திற்கு இடையூறு செய்வது, வனவிலங்குகள் இருப்பிடத்திலிருந்து போராட்டம் செய்ய முயற்சி செய்தது தொடர்பாக வனத்துறையினர் சட்டம் (தமிழ்நாடு வன சட்டம் V/1882), 1992 திருத்த சட்டம் பிரிவு 21(d,h) மற்றும் 1972ஆம் ஆண்டு இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.