உன்னைய நம்பி வந்ததுக்கு... ‘கூகுள் மேப்’பை நம்பி ஏரியில் விழுந்த கார்!
கனககிரி பகுதியில் கூகுள் மேப் உதவியுடன் வந்த கார் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரியில் விழந்தது.
உலகில் பல லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று கூகுள் மேப். நமக்கு தெரியாத இடங்களுக்கு செல்லும்போது இதனைப் பயன்படுத்தி நாம் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். சுற்றுலா செல்பவர்கள் அதிகமாக கூகுள் மேப்பை பயன்படுத்தியே பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், சமீப காலமாகவே கூகுள் மேப்பை பார்த்து செல்லும் வாகனங்கள் பல விபத்துக்குள்ளாகும் செய்திகள் அதிகமாகி வருகின்றன.
அந்த வரிசையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று இன்று காலை சேலம் மகுடஞ்சாவடி அடுத்த கனககிரி பகுதியில் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார். தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த மீட்புப் படையினர் கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.